யேசுதாஸ் ஆசையை நிறைவேற்றி விட்டேன் - இளையராஜா
|யேசுதாஸின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று இளையராஜா மலையாளத்தில் பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
சென்னை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'ஜமா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா அவர்கள் 2025ம் ஆண்டு தனது சிம்பொனியை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது ரசிகர்க்ளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஜேசுதாஸின் வாழ்நாள் சாதனையை பாராட்டும் வகையில் பிரமாண்டமான விழாவில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜேசுதாஸ் சிம்பொனியை விரைவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்பொனியை எழுதி பதிவு செய்து முடித்து விட்டதாக ஒரு தகவலை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை தன்னிடம் சிம்பொனியை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட பாடகர் ஜேசுதாஸிற்கு கேட்கும்படி பேசியிருக்கிறார்.
வீடியோவில், 'அன்புக்குரிய கேரள மக்களே,சொந்தங்களே வணக்கம். இந்தச் செய்தி என்னுடைய ஜே.யேசுதாஸ் அண்ணனுக்கானது மட்டும்தான். ஜே.சி. அண்ணனுக்குக் கொச்சியில் வைத்து, பாராட்டு விழா நடந்தபோது, அண்ணன் என்னிடம் தன்னுடைய ஆசையை சொன்னார். அது என்னவென்றால், கேரளாவிற்கு வந்து நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள், இசையமைத்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சிம்பொனி செய்ததில்லை. நீங்கள் ஒருநாள் கேரளாவில் சிம்பொனி இசையக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ஜே.சி. அண்ணன் சொன்னதை நான் நிறைவேற்றி விட்டேன். சிம்பொனிக்காக முழுமையாக எழுதி, சிம்பொனியை முழுமையாக ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தை ஜே.சி.அண்ணனுக்கு பெரிய சந்தோஷத்தோடு தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் சொன்ன வேலை, கடவுளின் அனுகிரகத்தோடு சரியாக வந்துள்ளது. ரொம்ப சந்தோஷம். அண்ணன் ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன்' என இளையராஜா தெரிவித்திருக்கிறார்.