'விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும்..' - நடிகை ராதிகா
|விஷாலுக்கு தைரியம் இருந்தால் தரக்குறைவாக பேசும் யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், "தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து குற்றச்சாட்டு கூறினார். அவரிடம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து சொல்கிறீர்கள்? இதற்கு என்ன சாட்சி உள்ளது? என பல கேள்விகளை கேட்டார்கள்.
ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விஷயங்களை ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது. அந்த திறமையான பாடகி, தனது வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டார். அவருக்காக யார் வந்து குரல் கொடுத்தார்கள்?
திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது.
நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்தேன். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் வருகிறேன்.
பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க பெரிய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறை அல்லது நீதித்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் வரும்."
இவ்வாறு ராதிகா தெரிவித்தார்.