'லாபதா லேடீஸ்' திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றால்...'- நடிகர் அமீர்கான்
|நடிகா் அமீா்கான், இயக்குனர் ராவ் உள்ளிட்டோரின் கூட்டு தயாரிப்பில் இப்படம் உருவானது.
மும்பை,
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கவுரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-வது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தோ்வாகியுள்ளது.
இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குனர் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.
இந்நிலையில், 'லாபதா லேடீஸ்' ஆஸ்கர் விருது வென்றால் இந்திய மக்கள் பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள் என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
' ஒரு படம் ஆஸ்கர் விருது வெல்லும்போது உலக மக்கள் அனைவரும் அப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவார்கள். அதன்படி, லாபதா லேடீஸ் படம் ஆஸ்கர் விருது வென்றால், இன்னும் அதிக பார்வையாளர்களை இப்படம் சென்றடைய முடியும்.
இந்தியர்கள் மிகப்பெரிய சினிமா பிரியர்கள். இதனால், விருதை வெல்ல நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். அவ்வாறு வென்றால் நாட்டு மக்கள் பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். எனவே நம் நாட்டு மக்களுக்காக, விருதை வென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்' என்றார்.