வேள்பாரி நாவலை தழுவி காட்சிகளை வைத்தால் நடவடிக்கை எடுப்பேன்- இயக்குநர் ஷங்கர்
|இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவல் குறித்த பதிவொன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர். இவரது இந்தியன்- 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார். அதில்," அனைவரின் கவனத்திற்கு... பலரும் சு. வெங்கடேசனின் நாவலான 'வீரயுக நாயகன் வேள்பாரி'யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன். நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்" என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்ட அந்த டிரெய்லர், தேவரா படமா அல்லது சூர்யாவின் கங்குவா படமா எது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.