அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகை நித்யா மேனன்
|நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.
சென்னை,
'வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நித்யாமேனன். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் நிகழ்ச்சி ஒன்றில் அளித்துள்ள பேட்டியில், "நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்று தான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.
மேலும், அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன். அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். எல்லோரும் கடைபிடிக்கும் வழியிலேயே நானும் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை'' என்று கூறியுள்ளார்.