'நிறங்கள் மூன்று' படத்தின் கதையை படித்ததும் பயம் வந்துவிட்டது - நடிகர் அதர்வா
|கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
சென்னை,
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். இத்திரைப்படம் வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் அதர்வா 'வெற்றி' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் நேற்று வெற்றி கதாப்பாத்திரத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று இப்படம் குறித்து நடிகர் அதர்வா செய்தியாளர்களின் சந்திப்பின் போது, "கார்த்திக் நரேன் உடைய `துருவங்கள் பதினாறு' திரைப்படம் எனக்கு பிடிக்கும். அந்த படத்தை பார்த்ததில் இருந்தே அவரது படத்தில் நடிக்க ஆசை இருந்தது. அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குனர். அவர் எடுக்கும் ஒவ்வொரு காட்சியும் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இந்த படத்தின் கதையை நான் படித்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது.
இந்தப் படம் ரொம்ப வித்தியாசமான படம். சரத்குமார் சார் உடன் இப்போதான் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். இப்போது நல்ல முறையில் இப்படத்தை கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். இப்படத்தில் பல புதுமையான விஷயங்கள் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.