சினிமா செய்திகள்
நடிகர் தினேஷின் நடிப்பை பார்த்து பிரமித்துவிட்டேன் - இயக்குநர் ஷங்கர்
சினிமா செய்திகள்

நடிகர் தினேஷின் நடிப்பை பார்த்து பிரமித்துவிட்டேன் - இயக்குநர் ஷங்கர்

தினத்தந்தி
|
10 Jan 2025 8:21 PM IST

‘லப்பர் பந்து’ தினேஷ் உடன் பணியாற்ற வேண்டும் என இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தினேஷ் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் பார்வையற்றவராக நடித்து பாராட்டு பெற்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விசாரணை படமும் பெயர் வாங்கி கொடுத்தது. ரஜினிகாந்தின் கபாலி படத்திலும் நடித்துள்ளார். திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, உள்குத்து, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று "லப்பர் பந்து." இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியிலும் ஹிட் அடித்தது. லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் நடித்து இருந்தனர். இதில் அனைவரின் நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் 'கெத்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் முன்னணி இயக்குநர் ஷங்கர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் 'அட்டக்கத்தி' திரைப்படத்தில் தினேஷ் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், அவருடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசும் போது, "லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இப்படியொரு நடிப்பை நான் யாரிடத்திலும் பார்க்கவில்லை. எந்த சாயலும் இல்லாத நடிப்பாக இருந்தது. அது நடிப்பு போன்றே தெரியவில்லை. எப்படி அவர் இதை செய்தார் என்கிற மாதிரி இருந்தது. தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டிய நபர் அவர். தினேஷுக்கு பாராட்டுக்கள். அவருடன் பணியாற்ற வேண்டும் என எனக்கு ஆசை" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்