டெல்லி கணேஷுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால்.... பார்த்திபன் உருக்கம்
|டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று நடக்கிறது.
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தன. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே டெல்லி கணேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லி கணேஷ் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு, நடிகர் பார்த்திபன் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு பார்த்திபன் ஆறுதல் கூறினார். அதன்பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டெல்லி கணேஷ் ஒரு இயல்பான மனிதர். மிகச் சிறந்த நடிப்பாளர். தனிப்பட்ட திறமை கொண்டவர் டெல்லி கணேஷ். வாழ்நாள் முழுவதும் அவர் நல்ல படங்களில் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் சாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டேன்; அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை; இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு. இவ்வாறு அவர் கூறினார்.