'மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமில்லாமல், அறிவூட்டவும் வேண்டும்' - பா.ரஞ்சித்
|தங்கலான் படத்தின் இந்தி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேசினார்.
மும்பை,
கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் தற்போது உருவான படம் 'தங்கலான்'. இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கேல்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
கடந்த 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
இந்த படம் வட இந்தியாவில் இந்தியில் வெளியாகாமல் இருந்தநிலையில், வரும் 30-ம் தேதி அங்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமில்லாமல், அறிவூட்டவும் வேண்டும் என்று கூறினார்.
அவர் கூறுகையில்,
'சாதிப் பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளது. அதனால் நான் பாதிக்கப்பட்டேன். அம்பேத்கரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதை என் கலையின் மூலம் பேச விரும்பினேன். நான் மக்களை மகிழ்விக்க மட்டும் விரும்பவில்லை, அவர்களுக்கு அறிவூட்டவும் விரும்புகிறேன்', என்றார்.