'காதல் கதையில் நடிக்க விரும்புகிறேன்' - 'சிகரம் தொடு' பட நடிகை
|முழு காதல் கதையில் நடிக்க விரும்புவதாக நடிகை மோனல் கஜ்ஜர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மோனல் கஜ்ஜர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'சுடிகாடு' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, மலையாளத்தில் டிராகுலா, தமிழில் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு ஆகிய படங்களில் நடித்தார்.
இவரது இந்த இரண்டு தமிழ் படங்களும் ஒரே நாளில் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தியில் வெளியான கசூம்போவில் ரோஷனாக நடித்ததற்காக மோனல் கஜ்ஜர் பாராட்டப்பட்டார். இந்நிலையில், முழு காதல் கதையில் நடிக்க விரும்புவதாக நடிகை மோனல் கஜ்ஜர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதை பாக்கியமாக உணர்கிறேன். இருப்பினும், நான் இதுவரை ஒரு காதல் கதையில் நடித்ததில்லை. இப்போது அப்படி ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட மொழி படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழி படங்கில் நடித்திருக்கிறேன். அது என்னை ஒரு நடிகையாக கூடுதல் வளர்ச்சி பெற உதவுகிறது, ' என்றார்.