'அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்க கூடாது' - நடிகை பார்வதி நாயர்
|பார்வதி நாயர், சமீபத்தில் விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை பார்வதி நாயரிடம், விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம், அது உண்மைதான். முத்தக் காட்சிகள் இருந்ததால் படத்தில் நடிக்க கொஞ்சம் தயங்கினேன்.
மேலும், சந்தீப் ரெட்டி வங்கா தெலுங்கில் இயக்கும் முதல் படம் என்பதால் என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால், அந்த படத்தை நான் தவறவிட்டிருக்கக்கூடாது.
அது மிகவும் நல்ல படம். நம்முடையது எதுவோ அது கண்டிப்பாக நம்மை வந்து சேரும். அதன்படி, இதைவிட நல்ல படங்கள் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
கடந்த 2017-ம் ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் ரெட்டி வங்கா தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.