அதற்கு மறுத்தேன்... படத்தில் இருந்து இயக்குநர் தூக்கினார்: பிரபல நடிகை பேட்டி
|நடிகை மீனாட்சி சேஷாத்ரிக்கு அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவளித்தது. இதனால், அவர் மீண்டும் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.
புதுடெல்லி,
தமிழில் டூயட் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபல நடிகையானார். நடிகர் ரஜினிகாந்துடன் மகாகுரு உள்ளிட்ட 2 இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
80 மற்றும் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். சிறந்த நடன கலைஞராகவும் திகழ்பவர். இந்தியில் இவர் நடித்த தாமினி படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது. அப்போது, அந்த படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி, யூடியூப்பில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தாமினி படத்தின் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி, தனிப்பட்ட முறையில் அணுகி, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என என்னிடம் கூறினார். ஆனால் அவருடைய கோரிக்கையை ஏற்காமல் நான் நிராகரித்தேன்.
அவர் அளித்த வாய்ப்பை நான் மறுத்து விட்டேன். இதனால், படத்தில் இருந்து தூக்கப்பட்டேன். வேறு நடிகையை நடிக்க வைத்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும், தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகை மீனாட்சி சேஷாத்ரிக்கு ஆதரவளித்தது. இதனால், அவர் மீண்டும் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.
அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர், அதனை ஒரு சண்டையாக நான் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், நான் சரியென உணர்ந்தவற்றில் உறுதியாக நின்றேன்.
இதுபற்றி இனி பேச வேண்டாம் என்று சந்தோசும், நானும் முடிவு செய்தோம். அது பாலத்தின் அடியில் தண்ணீர் செல்வது போன்றது. ஆனால், எதிர்த்து நிற்பதற்கான தைரியம் முக்கியம் வாய்ந்தது. ஏனெனில், இனி அவர் தேவையில்லை என ஒருவரை யாரும் கூறி விட கூடாது.
வேலை செய்யும் இடத்திலும், அதனை கடந்தும் பல்வேறு மறைமுக தாக்கங்கள் இருக்கும். அதனை நான் அமைதியாக இருந்து எதிர்கொண்டேன். இந்த விசயத்தில், நான் எதுவும் கூற கூடாது என முடிவு செய்தேன். இதனை சண்டையாக மாற்றுவது என்னுடைய கண்ணியத்திற்கு குறைவு என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
வேலையை ஒரு குழுவாக நாம் செய்ய வேண்டும். அதுவே, படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் நான் கூற வந்த செய்தி என்று அவர் கூறியுள்ளார். அவருக்கு முக்காதர் கா பைஸ்லா, பரிவார், விஜய், சாகென்ஷா உள்ளிட்ட இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி தந்தன.