படம் தொடர்பாக பலமுறை விஜய்யை சந்தித்தேன்- இயக்குனர் சிறுத்தை சிவா
|விஜய்யை சந்தித்து படம் எடுப்பதற்கு கதை கூறினேன் என்று இயக்குனர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'கங்குவா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சிவா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். விஜய் படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கும் இயக்குநர் சிவா பதில் அளித்தார்.
"நான் பலமுறை விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறேன். படம் எடுப்பதற்கு கதையையும் கூறியிருக்கிறேன். படம் தொடர்பாக நிறைய சந்திப்புகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட அவரை சந்தித்தேன். ஆனால் சரியான காலம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்," என்று இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்தார்.