'கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன்' - நடிகை சமந்தா
|சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரில் நடித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருந்தபோதும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட சில படங்களை தவிர 'சாகுந்தலம்', 'குஷி' , 'யசோதா' போன்ற படங்கள் குறைவான வரவேற்பையே பெற்றன.
இந்நிலையில், இந்த பின்னடைவு குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'உண்மைதான், கடந்த காலத்தில் நான் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கடந்த காலத்தில் சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்' என்றார்.
சமந்தா தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரில் நடித்து முடித்துள்ளார். நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடர் வரும் 7-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.