'அம்மா வாங்கிய கடனை அடைக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்' - நடிகர் சூர்யா
|நடிகராக வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை என சூர்யா கூறினார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, சினிமாத்துறைக்கு வந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
'என்னுடைய அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரூ. 25,000 கடன் வாங்கியதை ஒரு நாள் என்னிடம் தெரிவித்தார். அப்போதுவரை நான் நடிகராக வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒரு நடிகரின் மகனாக இருப்பதால், பல ஆபர்கள் வருவது வழக்கம். அப்படித்தான் மணிரத்ணம் சார் ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்.
என் அம்மாவிடம் உங்கள் கடனை அடைத்து விட்டேன், இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லத்தான் நான் சினிமாத்துறைக்கு வந்தேன். அப்படித்தான் என் கெரியரை ஆரம்பித்தேன், அப்படித்தான் சூர்யா ஆனேன்' என்றார்.
வசந்த் எழுதி இயக்கி மணிரத்னம் தயாரித்த 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தில் விஜய் முக்கிய வேடத்தில் நடித்தார். கவுசல்யா மற்றும் சிம்ரன் கதாநாயகிகளாக நடித்தனர்.