இயக்குநர் கிரண் ராவ் மற்றும் 'லாபத்தா லேடீஸ்' பட குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன் - அமீர்கான்
|எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் கிரண் ராவ் மற்றும் 'லாபத்தா லேடீஸ்' பட குழுவினரை எண்ணி பெருமைப்படுகிறேன் என நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபத்தா லேடீஸ்' திரைப்படம் தோ்வாகியுள்ளது.
நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.
இது தொடர்பாக அமீா்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லாபத்தா லேடீஸ் திரைப்படம் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்தியால் மகிழ்ச்சியடைந்தேன். இயக்குநர் கிரண் ராவ் மற்றும் குழுவினரை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தேர்வு குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்துக்கும் அன்பும், ஆதரவும் அளித்த பார்வையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும், ஒட்டுமொத்த திரையுலகத்தினருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி. 'லாபத்தா லேடீஸ்' திரைப்படம் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களை கவரும் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தை அமீர்கான் தயாரித்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் அமீா்கான் தயாரிப்பில் வெளியான 'லகான்' (2001), 'தாரே ஜமீன் பர்' (2007) ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, இந்தியா சாா்பில் மலையாளத்தின் '2018: எவரிஒன் இஸ் எ ஹீரோ' திரைப்படம் ஆஸ்கா் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இது கேரளத்தில் 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தையொட்டி நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்