'நான் அந்த மாதிரி ஆள் இல்ல'- கொட்டுக்காளி விழாவில் சிவகார்த்திகேயன் சொன்னது என்ன?
|இன்று 'கொட்டுக்காளி' பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
சென்னை,
சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொட்டுக்காளி'. இந்த படத்தை 'கூழாங்கல்' பட இயக்குனர் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ' வினோத் இயக்கிய கூழாங்கல் படத்தை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன். பிறகு படத்தைப் பற்றி பேசி பேசி புரிந்து கொண்டேன். இயக்குனர் வினோத் ராஜ் ரோட்டர்டாம் என்ற விருது பெற்றிருப்பதாக கூறினார்கள். இது அறிமுக இயக்குனர்களுக்கு வழங்கப்படும் விருது என்றும், இதனை கிறிஸ்டோபர் நோலன் பெற்றிருக்கிறார் என்றும் கூறினார்கள்.
எனக்கு புல்லரித்துவிட்டது. மதுரையிலிருத்து போய் சர்வதேச விருது பெற்றிருக்கிறார். அப்பொழுதே அவரின் அடுத்த படத்தை நான் தயாரிப்பதாக தெரிவித்தேன். வசூலுக்காக மட்டும் இந்த படத்தை நான் தயாரிக்கவில்லை. அவரைக் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வினோத்ராஜ் தமிழ் சினிமாவின் பெருமை.
நான் யாரையும் கண்டுபிடிச்சு, இவங்களுக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கப்படுத்திவிட்டார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை, என்றார்.