< Back
சினிமா செய்திகள்
எந்த போட்டியிலும் நான் இல்லை - நடிகர் அரவிந்த்சாமி
சினிமா செய்திகள்

எந்த போட்டியிலும் நான் இல்லை - நடிகர் அரவிந்த்சாமி

தினத்தந்தி
|
7 Oct 2024 4:03 PM IST

'நான் அதிக படம் நடிப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும்' என்று நடிகர் அரவிந்த்சாமி 'மெய்யழகன்' படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் வெற்றி விழாவை, நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர்.

அப்போது நடிகர் அரவிந்த்சாமி பேசும்போது, "இதில் எனது நடிப்பை விட கார்த்தி நடிப்பை பத்திரிகைகள் பாராட்டியது பெருமையாக இருந்தது. இயக்குநர் என்ன விரும்பினாரோ அதை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்கச் செல்லும் முன் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டு செல்வேன். உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பைப் பார்த்து அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுக்குப் போட்டியாக நடிக்க வேண்டும் என நினைப்பதில்லை. நான் அதிக படம் நடிப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். நான் எந்த போட்டியிலும் இல்லை. செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்" என்றார்.

கார்த்தி பேசுகையில், " சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும். அப்படி ஒரு படமாகதான் இதை பார்க்கிறேன். அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும். அரவிந்த்சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம்." என்றார்.

மேலும் செய்திகள்