கழிவறைக்கு வெளியே கட்டி அணைத்து முத்தம்... பிரபல நடிகர்கள் மீது புதிதாக நடிகை குற்றச்சாட்டு
|கேரளாவை விட்டு சென்னைக்கு சென்றபோது, என்ன நடந்தது? என ஒருவரும் என்னிடம் வந்து கேட்கவில்லை என்றும் நடிகை வேதனை தெரிவித்து உள்ளார்.
சென்னை,
கேரளாவில் மலையாள பட நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பல பிரபல நடிகர்களும் சிக்கியுள்ளனர். இந்த சூழலில், மலையாள பட நடிகையான மினு முனீர் இன்று புதிதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், 2013-ம் ஆண்டு படப்பிடிப்பு தளம் ஒன்றில் 4 நடிகர்கள் உடல் ரீதியாகவும் மற்றும் ஆபாச பேச்சுகளை பேசியும் துன்புறுத்தினர் என பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில், நடிகர்கள் முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு மற்றும் ஜெயசூரியா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வேதனையான சம்பவம் பற்றி அவர் ஊடகம் ஒன்றிடம் கூறும்போது, படப்பிடிப்பு தளத்தில் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது, நடிகர் ஜெயசூரியா பின்னால் இருந்து என்னை கட்டி அணைத்ததுடன், என்னுடைய ஒப்புதல் இன்றி முத்தம் கொடுத்து விட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த நான் அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டேன் என்றார். அவருடன் இருக்க சம்மதம் என்றால், படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்றும் முனீரிடம் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை முனீர் தெரிவித்ததுடன் இல்லாமல், மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதன்படி, மலையாள பட நடிகர்களுக்கான கூட்டமைப்பின் (அம்மா) செயலாளர் இடவேள பாபு என்பவரை, உறுப்பினருக்கான விண்ணப்பம் பெறுவதற்காக நடிகை முனீர் அணுகியிருக்கிறார்.
இதுபற்றி முனீர் கூறும்போது, உறுப்பினராக விண்ணிப்பிக்க தன்னுடைய பிளாட்டுக்கு வரும்படி பாபு கூறினார். இதன்படி அவருடைய பிளாட்டுக்கு சென்றபோது, உடல்ரீதியாக துன்புறுத்தினார் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வான முகேஷ், அவருடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்திற்காக உறுப்பினர் அந்தஸ்து தராமல் மறுத்து விட்டார் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
எனினும் மணியன்பிள்ளை பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. மலையாள திரையுலகில் நிறைய சுரண்டல்கள் உள்ளன. இதற்கு சாட்சியாகவும், பாதிக்கப்பட்டவராகவும் நான் இருக்கிறேன் என முனீர் கூறியுள்ளார்.
நான் சென்னைக்கு சென்றபோது, என்ன நடந்தது? என ஒருவரும் என்னிடம் வந்து கேட்கவில்லை என்றும் வேதனை தெரிவித்து உள்ளார். 2013-ம் ஆண்டில், இந்த நபர்களால் உடல் மற்றும் ஆபாச பேச்சுகளால் பாதிக்கப்பட்டேன். அப்போது படப்பிடிப்பிலும் வேலை செய்து கொண்டு இருந்தேன். படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுத்து, தொடர்ந்து பணியாற்ற முயன்றேன்.
ஆனால், பொறுக்க முடியாத அளவுக்கு துன்புறுத்தல்கள் இருந்தன. இதனால், மலையாள திரையுலகை விட்டு வெளியேறி சென்றேன் என்றார். இதுபற்றி பேசிய கட்டுரை ஒன்று பத்திரிகையிலும் வந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை மினு முனீர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர்களில் ஒருவரான மணியன்பிள்ளை கூறும்போது, இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பின்னணியில் பல்வேறு உள்நோக்கங்கள் இருக்க கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் ஒன்றும் தெரியாத நபர்களும், தவறிழைத்தவர்களும் இருக்க கூடும். அதனால், விரிவான விசாரணை தேவை என கூறியுள்ளார்.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவரான ரஞ்சித் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொது செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் கூறினார். நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், மற்றொரு மலையாள நடிகையான மினு முனீர் அவருடைய சமூக ஊடக பதிவில், பிரபல மலையாள நடிகர்களின் துன்புறுத்தல்களை பற்றி பகிர்ந்து உள்ளார்.