< Back
சினிமா செய்திகள்
சீசா படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சினிமா செய்திகள்

'சீசா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
5 Jan 2025 2:49 PM IST

ஆன்லைன் சூதாட்டம் எப்படி பேரழிவுக்கு வழி வகுக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை குணா சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

சென்னை,

நடிகர் நட்டி நட்ராஜ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'சீசா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நிஷாந்த் ரூசோ மற்றும் பாடினி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ல் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், 'சீசா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

நிஷாந்த் ரூசோவும் பாடினி குமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் நிஷாந்த் ரூசோவின் வேலைக்காரர் கொலை செய்யப்படுகிறார். புதுமண தம்பதியும் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி நட்டி நடராஜ் விசாரணையை தொடங்குகிறார். மாயமான தம்பதியையும் தேடுகிறார்.

அப்போது நிஷாந்த் ரூசோ மனநிலை பாதித்த நிலையில் திரும்பி வருகிறார். அவரது மனைவியின் நிலைமை என்ன ஆனது? வேலைக்காரரை கொன்றது யார்? என்பது அதிர்ச்சியான மீதி கதை.

போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ் நிறுத்தி நிதானமாக வழக்கை விசாரிக்கும் அணுகுமுறையால் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்துள்ளார். இளம் நாயகனாக வரும் நிஷாந்த் ரூசோ மனநோயினால் பாதிக்கப்பட்டவரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.

நாயகி பாடினி குமாருக்கு கணவனையும் கதையையும் தாங்கிப்பிடிக்கும் வேடம். அதை அவரும் குறை வைக்காமல் செய்துள்ளார். பாடல் காட்சியிலும் தாராளம். காவல் ஆய்வாளராக வரும் ஆதேஷ் பாலா, நாயகனின் நண்பனாக வரும் மூர்த்தி, நாயகியின் அப்பாவாக வரும் அரவிந்தராஜ், மருத்துவராக வரும் செந்தில்குமார் என அனைவரும் கொடுத்த வேலைக்கு நேர்மை செய்திருக்கிறார்கள்.

சரண்குமார் இசையில் சிவன் பாடல் கவனம் பெறுகிறது. பின்னணி இசையும் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. கதையை தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன். எம்பாமிங் சடலம் குறித்த காட்சியை விளக்கமாக சொல்லியிருக்கலாம்.

ஆன்லைன் சூதாட்டம் எப்படி பேரழிவுக்கு வழி வகுக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக நோக்கத்தோடும், கமர்ஷியலாகவும் சொல்லியுள்ளார் இயக்குனர் குணா சுப்ரமணியம்.

மேலும் செய்திகள்