< Back
சினிமா செய்திகள்
ராஜாகிளி படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சினிமா செய்திகள்

'ராஜாகிளி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
31 Dec 2024 3:20 PM IST

50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ராஜாகிளி' படம் உருவாகியிருக்கிறது.

தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 27-ந் தேதி வெளியான படம் 'ராஜாகிளி'. தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த நிலையில் 'ராஜாகிளி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

தொழில் அதிபர் தம்பி ராமையா, மனைவி மற்றும் ஒரே மகனுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார். மிதமிஞ்சிய பண வசதியால் இன்னொரு பெண்ணையும் மணக்கிறார். மூன்றாவதாகவும் இளம் பெண்ணுடன் பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் பெண்களால் அவருடைய நிம்மதி, சேர்த்து வைத்த செல்வம் என அனைத்தும் கைநழுவி போகிறது. கொலை பழி, சிறை வாழ்க்கை என அடுத்தடுத்து பல சோதனைகளை சந்திக்கிறார். கஷ்டங்களில் இருந்து அவரால் மீள முடிந்ததா? என்பது மீதி கதை.

தம்பி ராமையாவின் நடிப்பு பசிக்கு செல்வந்தர், யாசகர் என இரண்டு பரிமாணங்கள் நன்றாக தீனி போடுவதால் அதை தனக்கே உரிய நகைச்சுவையோடும் அழுத்தமான நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார். செல்வ செழிப்பில் செருக்கும், மிடுக்கும் ஒரு ரகம் என்றால், அடித்தட்டு நிலைக்குப் போன பிறகு வெளிப்படுத்தும் பரிதாபத்துக்குரிய ஏக்கம் இன்னொரு ரகம் என கதாபாத்திரத்தில் வாழ்ந்து காண்பித்துள்ளார்.

ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பாளராக தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார் சமுத்திரகனி. தம்பி ராமையாவின் வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பிடிக்கும் ஸ்வேதா நடிக்க மறந்தாலும் அதை அபரிமிதமான கவர்ச்சியால் சமன் செய்துவிடுகிறார்.

தீபா சங்கர், பழ கருப்பையா, பிரவீன் குமார், ரேஷ்மா, அருள் தாஸ், டேனியல் போப், கிரிஷ், வெற்றிக்குமரன், ஆண்ட்ரூஸ், மாலிக் என அனைவரும் கதைக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளார்கள். இனிமையான பாடல்களை கொடுத்து இசையமைப்பாளராகவும் கவனிக்க வைக்கிறார் தம்பி ராமையா. சாய் தினேஷ் பின்னணி இசை பலம்.

ஒளிப்பதிவாளர்கள் கேதர்நாத்-கோபிநாத் ஆகியோர் பகட்டு வாழ்க்கையையும், பட்டினி வாழ்க்கையையும் அற்புதமாக படம் பிடித்து திரைக்கதையை மெருகேற்றியுள்ளார்கள். இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பலகீனம். பெண் ஆசை சபல புத்தி மனிதர்களை எப்படி வீழ்த்தும் என்பதையும் பெண்களின் அவசர முடிவுகள் ஆண்களை எப்படி ஆபத்தில் சிக்க வைத்து விடும் என்பதையும் நேர்த்தியாக சொல்லி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.

மேலும் செய்திகள்