< Back
சினிமா செய்திகள்
மேக்ஸ் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சினிமா செய்திகள்

'மேக்ஸ்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
30 Dec 2024 6:19 PM IST

போலீஸ் அதிகாரியாக கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். விஜய் கார்த்திகேயா இயக்கிய 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

போலீஸ் அதிகாரி பணியில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாயகன் கிச்சா சுதீப், அது முடிந்து மீண்டும் பொறுப்பு ஏற்க போலீஸ் நிலையத்துக்கு வருகிறார். வழியில் பெண் போலீசிடம் தகராறு செய்யும் இரண்டு இளைஞர்களை அடித்து இழுத்து வந்து லாக்கப்பில் தள்ளுகிறார். அந்த இளைஞர்கள் அமைச்சர்களின் மகன்கள் என்பதால் மற்ற போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தயங்குகின்றனர்.

இந்த நிலையில் லாக்கப்பில் இரண்டு இளைஞர்களும் திடீரென்று இறந்து கிடக்க அதிர்ச்சி. அவர்களின் செல்போனில் முக்கிய தகவல்கள் இருப்பதால் இருவரையும் வெளியே கொண்டு வர அமைச்சர்களின் ஆட்கள் போலீஸ் நிலையத்துக்கு படையெடுக்கிறார்கள்.

இளைஞர்களை கொன்றது யார்? இருவரின் மரணத்தினால் அமைச்சரிடம் இருந்து வரும் ஆபத்தை கிச்சா சுதீப் எப்படி எதிர்கொண்டார் என்பது மீதி கதை. கிச்சா சுதீப் மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கும் வலுவான கதபாத்திரத்தில் வருகிறார். அவரது ஸ்டைல், பஞ்ச் வசனங்களில் தியேட்டரில் ஆரவாரம். அதிரடி சண்டையில் அனல். வரலட்சுமிக்கும் சுதீப்புக்குமான மோதல் காட்சிகளோடு ஒன்ற செய்கிறது.

வரலட்சுமியின் வில்லத்தனமும், ஸ்டைலான நடிப்பும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. இளவரசு, ஆடுகளம் நரேன், சுனில், சரத் லோகித் சவா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.

ஒரு இரவில் நடக்கும் கதையை சேகர் சந்திராவின் கேமரா அற்புதமாக படம்பிடித்து படத்தின் வேகத்துக்கு இழுத்துச் செல்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பரபரப்பை கூட்டுகிறது. சில காட்சிகளை யூகிக்க முடிவது பலகீனம்.

மாஸ் ஆக்சன் கமர்ஷியல் படத்தில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கச்சிதமாக வைத்து பரபரப்பு, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ராக்கெட் வேகத்தில் படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திகேயா.

மேலும் செய்திகள்