'மெட்ராஸ்காரன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
|வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகம் நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்காரன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'மெட்ராஸ்காரன்'. இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில், 'மெட்ராஸ்காரன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னையில் வேலை பார்க்கும் நாயகன் ஷான் நிகம், நாயகி நிஹாரிகாவை காதலித்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் வைத்து திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை செய்கிறார். முகூர்த்தத்துக்கு முன்னால் ஓட்டலில் தங்கி இருக்கும் காதலியை பார்க்க ஷான் நிகம் காரில் செல்லும்போது உள்ளூரைச் சேர்ந்த கலையரசனின் கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யா தத்தா மீது அவரது கார் மோதி விடுகிறது.
ஆஸ்பத்திரியில் சேர்த்த ஐஸ்வர்யா தத்தா வயிற்றில் இருந்த கருவும் கலைந்துவிட ஷான் நிகமை கொலைவெறியோடு துரத்துகிறார்கள். திருமணமும் நின்று போகிறது. அதன்பிறகு ஏற்படும் அதிர்ச்சி திருப்பங்கள் என்ன? என்பது மீதி கதை.
ஷான் நிகம் யதார்த்தமான இளைஞனாக வருகிறார். காதலுக்கு முன், காதலுக்கு பின் என தன் கதாபாத்திரத்தோடு கலந்திருக்கும் மகிழ்ச்சி, இன்பம், துன்பம், ஏமாற்றம், விரக்தி என எல்லாவித உணர்வுகளையும் மிக இயல்பாக கடத்தி கவனிக்க வைக்கிறார். கலையரசனின் மிகைப்படுத்தாத நடிப்பு கதாபாத்திரத்துக்கும், கதைக்கும் வலு சேர்க்கிறது. குழந்தை இறப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க கோபத்தின் உச்சத்துக்கு போவது, பிறகு மனைவியின் நிலைமையை நினைத்து அடங்கிப்போவது என மாறுபட்ட நடிப்பை வழங்கி சிறந்த கலைஞனாக தன்னை வெளிப்படுத்துகிறார்.
பாராட்டும் அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. பாடல் காட்சியில் பாஸ் மார்க் வாங்கிவிடும் நிஹாரிகா நடிப்பிலும் அசத்துகிறார். பாண்டியராஜன், கருணாஸ், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம், தீபா ஆகியோரின் பங்களிப்பு படத்துக்கு பலம்.
சாம்.சி.எஸ். இசை, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. தேவையில்லாத சண்டை காட்சிகள் பலகீனம். சஸ்பென்ஸ் கலந்த கதையில் விபத்தை மையமாக வைத்து திருப்பங்களுடன் குரோதம், காதல், நட்பு என சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார். இயக்குனர் வாலி மோகன்தாஸ்.