'35 சின்ன விஷயம் இல்ல' படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்
|நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ள '35 சின்ன விஷயம் இல்ல' என்ற படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
இயக்குனர் நந்த கிஷோர் இயக்கத்தில் விஷ்வதேவ் மற்றும் நிவேதா தாமஸ் நடிப்பில் கடந்த 27-ந் தேதி வெளியான படம் '35 சின்ன விஷயம் இல்ல'. இந்த படத்தில் கவுதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும் அருண் தேவ், புதுல்லா, ரச்சகொண்டா, பிரியதர்ஷி,புலிக்கொண்டா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், நிவேதா தாமஸ் நடித்துள்ள '35 சின்ன விஷயம் இல்ல' என்ற படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த விஷ்வதேவ், நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு மகன்கள். அனைத்து பெற்றோர்கள் போல் இவர்களும் தங்களது இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் மூத்த மகனுக்கு கணித பாடம் புரியாமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கிறான். இதனால் கணித ஆசிரியர் அவனை பூஜ்ஜியம் என்று அழைத்து கேலி செய்கிறார். மகனை பாஸ் மார்க் எடுக்க வைக்கும் முயற்சியில் நிவேதா தாமஸ் இறங்குகிறார். அது கைகூடியதா? என்பது மீதி கதை.
நிவேதா தாமசுக்கு கதையை தாங்கி பிடிக்கும் வலுவான கதாபாத்திரம். அதில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். அன்பான மனைவியாக பாசமான தாயாக மகனின் நிலை கண்டு கலங்குபவராக உணர்வுகளை முகத்தில் துல்லியமாக கடத்தி கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.
மகனாக வரும் அருண் தேவ் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கும் போதும், அவர்களிடம் திட்டு வாங்கும் போதும் யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். நிவேதா தாமஸின் கணவராக வரும் விஷ்வதேவ் மகன் மீது கோபம், மனைவியிடம் ஊடல் என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கணித ஆசிரியராக வரும் பிரியதர்ஷி புலிகொண்டா, பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியராக வரும் கே.பாக்யராஜ், கிருஷ்ணா தேஜ், சிறுமி அனன்யா, நிவேதா தாமஸின் இளைய மகனாக வரும் அபய் சங்கர் சிறப்பு தோற்றத்தில் வரும் கவுதமி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
நீண்ட வசனங்கள் சில இடங்களில் கதையை நகரவிடாமல் முடக்குவது பலகீனம். விவேக் சாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு பலம். கணிதம் கற்பதில் மாணவனுக்கு உள்ள சிரமத்தின் பின்னணியில் ஆசிரியர்கள், பெற்றோர் கடமைகளை வலியுறுத்தி எளிமையான திரைக்கதையில் தரமான படத்தை கொடுத்து கவனிக்க வைக்கிறார் இயக்குனர் நந்த கிஷோர்.