பிரபாஸ் படத்தில் இணைந்த மார்வெல் நடிகர்?
|பிரபாஸ், சலார் 2, கல்கி 2898 ஏடி 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 ஏ.டி' ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து, சலார் 2, கல்கி 2898 ஏடி 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், பிரபாஸ் படத்தில் பிரபல தென் கொரிய நடிகர் மா டோங்-சியோக் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், மா டோங்-சியோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சலார் பட போஸ்டரை பகிர்ந்துள்ளார். இது இவர் இப்படத்தில் நடிப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது என்றே கூறலாம்.
இந்த செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. மா டோங்-சியோக் 'டிரெய்ன் டு பூசன்', 'தி கேங்ஸ்டர்', தி காப், தி டெவில்', 'தி ரவுண்டப்' , மார்வெலின் 'எடர்னல்ஸ்' போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.