பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சில் இணைந்தாரா பிரபாஸ்?
|பிரசாந்த் வர்மா, 'அனுமான்' படத்தின் தொடர்ச்சியான 'ஜெய் அனுமான்' படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 ஏ.டி' ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை அடுத்து, சலார் 2, கல்கி 2898 ஏடி 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
மேலும் கே.ஜி.எப், சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ், பிரபாசை வைத்து 3 படங்களை தயாரிக்க உள்ளது. இப்படங்களை 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சில் பிரபாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பிரசாந்த் வர்மா பேசுகையில் , "நான் மிகப் பெரிய நட்சத்திரத்துடன் பணிபுரிகிறேன். நாங்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி இருக்கிறோம், அது தயாராக உள்ளது. விரைவில் அதை அறிவிப்பேன்" என்றார். இதனையடுத்து, பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் கீழ் ஒரு திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இது வெறும் வதந்தி என்றே கருதப்படுகிறது.
பிரசாந்த் வர்மா தனது சினிமாடிக் யுனிவர்சின் கீழ் உருவான 'அனுமான்' படத்தின் தொடர்ச்சியான 'ஜெய் அனுமான்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார். மேலும், மகா காளி , சிம்பா மற்றும் ஆதிரா ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.