'லப்பர் பந்து' படத்தை பாராட்டி தமிழில் பதிவிட்ட ஹர்பஜன் சிங்
|'லப்பர் பந்து' படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "என்னோட அடுத்த தமிழ் படக்குழு சொன்னாங்க "சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு". கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தை பாராட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார்.