< Back
சினிமா செய்திகள்
ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சி - நடிகர் சத்யராஜ்
சினிமா செய்திகள்

ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சி - நடிகர் சத்யராஜ்

தினத்தந்தி
|
22 Nov 2024 6:54 PM IST

ரஜினியுடன் மீண்டும் பணிபுரிந்து வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'கூலி' படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜிடம் கூலியில் ரஜினிகாந்த்துடன் நடித்து வரும் அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், "ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது. பழைய விஷயங்கள் குறித்து எல்லாம் பேசினோம். உடல்நிலை, உடற்பயிற்சி குறித்து பேசினோம். உங்களுக்கு என்ன வயதாகிறது என்று கேட்டார். 70 என்றவுடன் 70 ஆயிடுச்சா என்று வியந்தார். நானும் 45 வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். 'கூலி' படம் குறித்து எதையுமே சொல்ல முடியாது. ரஜினியும் நானும் 'மூன்று முகம்' படத்தில் தான் முதலில் இணைந்து நடித்தோம்.பின்பு 7-8 படங்களில் அவருடன் நடித்துவிட்டேன். கடைசியாக சேர்ந்து நடித்தது 'மிஸ்டர் பாரத்' படம்தான்" என்று தெரிவித்துள்ளார்.

கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்