< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியிருப்பது மகிழ்ச்சி - இயக்குனர் ஞானவேல்
சினிமா செய்திகள்

'வேட்டையன்' குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியிருப்பது மகிழ்ச்சி - இயக்குனர் ஞானவேல்

தினத்தந்தி
|
20 Oct 2024 9:12 PM IST

குடும்பங்கள் கொண்டாடும் படமாக ‘வேட்டையன்’ மாறியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்தார்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இன்று இயக்குநர் த. செ. ஞானவேல் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய, படத்தின் இயக்குநர் ஞானவேல் கூறியதாவது: " நடிகர் ரஜினிகாந்த் இல்லையென்றால், வேட்டையன் சாத்தியமில்லை. ஜெயிலர் படத்தின் பெரிய கமர்சியல் வெற்றிக்குப் பின்பும் கதையைச் சார்ந்த ஒரு திரைப்படத்தில் அவர் நடித்தார். படைப்பு சுதந்திரத்துடன் இப்படம் வெளியாவதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது உருவாகியிருக்கிறது "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் மிகப்பெயரிய வெற்றியை தொடர்ந்து வேட்டையன் படக்குழு படத்திற்கு ஆதரவளித்து இந்தப் பயணத்தில் பயணித்த அனைவருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கியது. அதில் இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகை ரித்திகா சிங் அங்கிருந்தவர்களுக்கு தங்களின் கைகளால் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்