அபூர்வ வைரமே...தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஸ்ருதிஹாசன்
|களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.
சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சீமான், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், நடிகர், நடிகைகள், மநீம கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன்,
"பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் அபூர்வமான வைரம். எப்போதும் உங்கள் பக்கத்தில் நடப்பதே என் வாழ்க்கை விருப்பங்களில் ஒன்று. உங்களுடைய மாயாஜால கனவுகள் நிறைவேறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா" என தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
1960 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்வை தொடங்கிய கமல்ஹாசன், நான்கு தேசிய திரைப்பட விருதுகள் , ஒன்பது தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , நான்கு நந்தி விருதுகள் , ஒரு ராஷ்டிரபதி விருது, இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பதினெட்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். 1984 இல் கலைமாமணி விருது , 1990 இல் பத்மஸ்ரீ , 2014 இல் பத்ம பூஷன் மற்றும் 2016 இல் ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் (செவாலியே ) விருது ஆகியவற்றையும் வென்றுள்ளார்.