லண்டனில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் பாடிய மகளிர் பெருமை கூறும் 'மகளி' பாடல்
|லண்டனில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'மகளி' என்ற ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இதுவரை 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர் 'த வாய்ஸ் ஆர்ட்ஸ்' (The Voice Art) நிறுவனம் தயாரிப்பில் மகளிர் பெருமை கூறும் 'மகளி' என்ற ஆல்பம் பாடலை பாடியுள்ளார். இவருடன் இணைந்து லண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் புரட்சிப் பாடலுக்கான வரிகளை பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார்.
இந்த பாடல் வருகிற 29-ந் தேதி லண்டன் ஹேய்ஸ் பகுதியில் உள்ள கிரிஸ்டல் ஹால் அரங்கத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்து வைக்க உள்ளனர். பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் இந்த பாடலை வெளியிட உள்ளார்.
இதற்கிடையில், இந்தப் பாடலை கடந்த 16-ம் திகதி பிரிட்டன் பாராளுமன்றத்தில், 'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' குழுவினருடன் எமிலி டார்லிங்டன் இணைந்து பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.