'குட் பேட் அக்லி' பட அப்டேட் - ஜி.வி.பிரகாஷின் பதிவு வைரல்
|குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. ஏனென்றால், அஜித்தின் மற்றொரு படமான 'விடாமுயற்சி' பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், குட் பேட் அக்லி படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஜி.வி.பிரகாஷ் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைப்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து குட் பட் அக்லி படத்தின் அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதன்படி, ரசிகர் ஒருவர் 'அண்ணா குட் பேட் அக்லி படம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது' என்று கேட்டுள்ளார். அதற்கு ஜி.வி.பிரகாஷ்'
'ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் செலிப்ரேஷன் ஆப் லைப் இசைக்கு ஒரு நடனக் காட்சியைப் படமாக்கினால் எப்படி இருக்கும்?..நன்றாக இருக்கும் அல்லவா' இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.