'கோட்' திரைப்பட டிக்கெட் விற்பனை: நிர்வாகிகளுக்கு தலைமை புதிய உத்தரவு
|நடிகர் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" (GOAT) திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கோட் 'படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த சூழலில் கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர். விஜய் திரைப்படம் எப்போது வெளியானாலும் அதன் டிக்கெட் விலை அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. சிலர் பிளாக்கில் டிக்கெட் விற்பதும் உண்டு.
இந்நிலையில் 'கோட்' திரைப்பட டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கி உள்ளநிலையில் இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தலைமை இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி திரைப்பட டிக்கெட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.