மிரட்டிய விஜய் - 'தி கோட்' படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
|விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூலித்தது.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள 'தி கோட்' முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. தற்போது அது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியா முழுவதும் ரூ. 43 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், தமிழ்நாட்டில், ரூ.38.3 கோடியும், தெலுங்கில் ரூ. 3 கோடியும் மற்றும் இந்தியில் ரூ.1.7 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிகிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக 'தி கோட்' அமையும். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.