'கேம் சேஞ்சர்' பட விழாவுக்கு வந்த ரசிகர்கள் விபத்தில் உயிரிழப்பு - ராம் சரண் நிதியுதவி
|'கேம் சேஞ்சர்' படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஐதராபாத்,
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி உள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கலந்துகொண்டிருந்தார். மேலும், பல ரசிகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்திருந்த 2 ரசிகர்கள் விழா முடிந்து வீடு திரும்பும்போது வடிசலேறு என்ற பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளாகினர். துரதிஷ்டவசமாக இருவருமே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த ராம் சரண், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும் செய்துள்ளார்.
ராம் சரண் மட்டுமில்லாமல் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கி இருக்கிறார்.