'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியாகும் - தயாரிப்பாளர் உறுதி
|'கேம் சேஞ்சர்' பட டிரெய்லர் புத்தாண்டன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற கேம் சேஞ்சர் பட நிகழ்ச்சியில் தில் ராஜு இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இப்போதெல்லாம், படத்தின் மதிப்பை அதன் டிரெய்லர்தான் தீர்மானிக்கிறது. அதனை உங்கள் முன் கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். புத்தாண்டன்று நீங்கள் டிரெய்லரை பார்ப்பீர்கள்' என்றார். புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளநிலையில், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.