இயக்குனர் ஷங்கரை பாராட்டிய பவன் கல்யாண்
|இயக்குநர் ஷங்கர் திரைப்படங்கள் குறித்து ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பாராட்டி பேசியுள்ளார்.
ஐதராபாத்,
தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.இப்படத்தின் "ஜரகண்டி" ,'ரா மச்சா மச்சா' மற்றும் 'லைரானா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி கலந்து கொண்டார்.
இந்த நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண், " ராம் சரண் எனக்கு சகோதரன் மாதிரி. சிறுவயதிலிருந்தே மிகவும் ஒழுக்கமான, பொறுப்பான ஆளாக வளர்ந்தவர். அவரின் கேம் சேஞ்சர் வெற்றியைப் பெற வேண்டும். நான் சென்னையிலிருந்த காலத்தில் அதிகமாக திரையரங்குகளுக்குச் செல்ல மாட்டேன். ஆனால், இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் வாங்கிப் பார்த்தேன். அவர் இயக்கிய காதலன் படத்தை என் பாட்டியுடன் சென்று கண்டுகளித்தேன்." என தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.