கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் விவகாரம் - முடிவுக்கு வந்த சிக்கல்
|தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தின் முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி உள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆனால், இப்படம் தமிழ் நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்படி, ஷங்கர் இயக்கும் மற்றொரு திரைப்படமான இந்தியன் 3-யை முடித்துக்கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடக்கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்திருந்தது.
இந்தியன் 3' படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ. 65 கோடி பட்ஜெட் கேட்பதாகவும், 'இந்தியன் 2ல் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது' எனவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், தற்போது சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படும்நிலையில், அவர் இந்தியா திரும்பிய பிறகு பேசிக் கொள்ளலாம் என இரு தரப்பினரிடையே சுமூக முடிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும், திரைத்துறை கூட்டமைப்பிடம் அளித்த புகாரையும் லைகா நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தின் முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.