< Back
சினிமா செய்திகள்
நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக வழக்கு பதிவு
சினிமா செய்திகள்

நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்; நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக வழக்கு பதிவு

தினத்தந்தி
|
21 Feb 2025 9:42 PM IST

நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகாரின் பேரில் நடிகர் பாலா மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்,

தமிழில் 'அன்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, 'காதல் கிசு கிசு', 'கலிங்கா', 'வீரம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குநர் 'சிறுத்தை' சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா, கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் முதல் மனைவி அம்ருதாவிற்கும், அவருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் மனைவி அம்ருதாவையும் அவரது மகளையும் பின்தொடர்ந்து பாலா துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளத்திலுள்ள எடப்பள்ளி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கேரள போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தனது தாய் மாமன் மகளான கோகிலா என்பவரை நடிகர் பாலா கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் இந்த திருமணம் செய்துகொள்வதாக பாலா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு புகாரை பாலா மீது அம்ருதா கொடுத்துள்ளார். தங்களின் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக பாலா மீது புகார் கூறியிருக்கிறார். அதன் பேரில் நடிகர் பாலா மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்