விழாக்கள் காற்றைக் கொலைசெய்து விடக்கூடாது- கவிஞர் வைரமுத்து
|சுவாசக் கோளாறு உள்ளவர்களும் மூச்சு முட்டும் முதியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது 'எக்ஸ்'பதிவில் கூறியிருப்பதாவது:
விழாக்கள் புதியவை அல்ல. தொழில் சார்ந்தும் பருவங்கள் சார்ந்தும் 'விழவு மலி மூதூர்'களைத் தமிழகம் சங்ககாலத்திலேயே கண்டிருக்கிறது. தீபாவளி கொண்டாடுவது என்பது அவரவர் அறிவு. அவரவர் தெளிவு. அவரவர் முடிவு. ஆனால், விழாக்கள் காற்றைக் கொலைசெய்து விடக்கூடாது. சுற்றுச்சூழலின் சுத்தத்தில் குப்பை எறியக் கூடாது. ஒவ்வொரு தீபாவளியிலும் காற்று மாசு ஓசை மாசு இரண்டினாலும் சமூகத்தின் ஒருபகுதி நோயுறுகிறது. போகிக்கும் இது பொருந்தும். அடர்த்தியான கையினால் காற்று கவலைக்கிடமாவதாய் அறிக்கை சொல்கிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 என்று தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
சுவாசக் கோளாறு உள்ளவர்களும் மூச்சு முட்டும் முதியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பண்டிகை என்பது இறுகிக்கிடக்கும் மனத் தாழ்களுக்கு எண்ணெய் இடுவதாகவும், உடைந்த உறவுகளை ஒட்ட வைப்பதாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நிர்ப்பந்த சந்தோஷமாகவும் திகழ்வதாகக் கருதப்படுகிறது. அவற்றை மீறி சுற்றுச் சூழலின் சுவாசக் குழாய்களில் அழுக்குச்சுவர் கட்டுவது ஆபத்து. நிகழ்காலப் பெருமக்கள் எதிர்காலத்தைச் சிந்திப்பார்களா? கொண்டாட்டம் ஒரு குற்றமாகாமல் தடுப்பார்களா? நான் உங்கள் சுதந்திரத்திற்கு எதிரியல்ல; சுவாசத்திற்கு நண்பன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.