சிறையில் தள்ள வேண்டும் என்பதா? டாக்டருக்கு சமந்தா கண்டனம்
|தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை மற்றவர்களுக்கும் பயனளிக்கட்டுமே என்ற வகையில் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சென்னை,
நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் பற்றி பாட்காஸ்ட் மூலம் பகிர்ந்து வருகிறார்." இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ஒருவர், சமந்தா சொல்லும் சிகிச்சைகள் தவறானவை. அதற்காக அவரை சிறையில் தள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு பதிலளிக்கும் வகையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,
"கடந்த சில ஆண்டுகளாக தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனைபடி மருந்துகள் உட்கொண்டு வருகிறேன். இது மிகவும் விலை உயர்ந்தவை. நீண்ட காலமாக வழக்கமான சிகிச்சைகள் என்னை 'குணப்படுத்தவில்லை. பல சோதனைகளுக்கு பிறகு எனக்கு பிரமாதமாக வேலை செய்யும் சிகிச்சைகளை கண்டறிந்தேன். டி.ஆர்.டி.ஒ.வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.
அதைத்தான் மற்றவர்களுக்கும் பயனளிக்கட்டுமே என கூறினேன். ஆனால் ஒரு ஜென்டில்மேன் அவரும் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். என்னை சிறையில் தள்ள வேண்டும் என கடுமையான வார்த்தைகளால் என்னை விமர்சித்துள்ளார். தனது வார்த்தைகளால் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டார். நான் பிரபல நடிகையாக இருப்பதால் என் மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை. எனக்கு மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவரை அவரிடம் விவாதிக்க வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறேன் என சமந்தா பதிவிட்டுள்ளார்.