'ஒவ்வொரு படமும் என்னை ஒரு சிறந்த நடிகையாக வளர உதவுகிறது' - ருக்மணி வசந்த்
|தற்போது ருக்மணி வசந்த் கன்னடத்தில் 'பஹிரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சென்னை,
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது கன்னடத்தில் 'பஹிரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரசாந்த் நீல் கதை எழுத இயக்குனர் சூரி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். வரும் 31-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளநிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ருக்மணி வசந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு சிறந்த நடிகையாக வளர உதவுகிறது என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒவ்வொரு படமும் என்னை ஒரு சிறந்த நடிகையாக வளர உதவுகிறது. இதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பணியாற்றுவதன் அழகு. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை பாக்கியமாக உணர்கிறேன். நம்முடைய நடிப்புக்கு மொழித் தடைகள் இல்லை. மற்ற மொழி படங்களில் நடிக்கும்போது அந்த மொழியை கற்றுக்கொள்வதன் மூலம் ரசிகர்களை துல்லியமாக தொடர்புகொள்ள முடியும்' என்றார்.
இப்படத்தைத்தொடர்ந்து ருக்மணி வசந்த், சிவராஜ்குமாருடன் 'பைரதி ரணகல்' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இப்படம், வரும் நவம்பர் மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் ருக்மணி, விஜய்சேதுபதி ஜோடியாக 'ஏஜ்' படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக எஸ்.கே.23 படத்திலும் நடித்து வருகிறார்.