'கங்குவா' படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் காலமானார்
|சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'கங்குவா' படத்தில் நிஷாத் யூசுப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
கொச்சி,
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். வருகிற நவம்பர் 14-ம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் உயிரிழந்தார்.
நிஷாத் யூசுப் (43) உடல் இன்று காலை கொச்சி அருகே பனம்பிள்ளியில் உள்ள அவரது அடுக்கு மாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது மரணம் இன்று அதிகாலை 2 மணியளவில் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இவர் 2022-ம் ஆண்டு 'தள்ளுமாலா' படத்துக்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றவர். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும் மம்முட்டி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென்று ஏற்பட்ட நிஷாத் யூசுப்பின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.