புதிய படங்களை துவங்க வேண்டாம் - தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம்
|மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சினிமா துறையில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக நடிகர்கள் சம்பளம் உயர்வு, தயாரிப்பு செலவு அதிகரிப்பு, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சிக்கல் ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கம் சில தீர்மானங்களை நிறைவேற்றியது. குறிப்பாக நவம்பர் 1-ம் தேதி முதல் எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது எனவும், புதிய படங்களுக்கு பூஜை போடப்படாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நவம்பர் மாதம் பிறக்க உள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், " தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம். நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம் "
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.