'கங்குவா' திரைப்படம் தீபாவளியில் ஏன் வெளியாகவில்லை தெரியுமா...!
|சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 14-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக கவனம் பெற்றன.
இதற்கிடையில் கங்குவா திரைப்படத்தை, ரஜினியின் 'வேட்டையன்' படம் வெளியான கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியில் வெளியீடுவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் வெளியிடவில்லை. பின்னர் தீபாவளி பண்டிகையில் வெளியிட திட்டமிட்டனர்.
ஆனால் தீபாவளி பண்டிகையில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் சுமார் 4,000 முதல் 5,000 திரைகள் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும். ஆனால் வருகிற 14- ந் தேதி வெளியிட்டால் சுமார் 11,500-க்கும் அதிகமான திரைகளில் இப்படம் திரையிடப்படும் என்று இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.