விவாகரத்து விவகாரம்: மந்திரி சுரேகாவிற்கு நடிகை சமந்தா பதில்
|நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் மந்திரி சுரேகா.
சென்னை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.
அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.
இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கொண்டா சுரேகா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில், சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதில் 'சமந்தா - நாகா சைதன்யா விவாகரத்துக்கு கே.டி ராமா ராவ் தான் காரணம் என்று கூறியுள்ளார். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள்' என சுரேகா கூறி இருக்கிறார்.
மந்திரி சுரேகாவின் பேச்சிற்கு நடிகை சமந்தா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அதில் "எனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமாக நடந்தது, இதில் அரசியல் சதி இல்லை, தயவுசெய்து அரசியல் சண்டையில் இருந்து எனது பெயரை விலக்கி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்; அதுபற்றி ஊடகங்களில் பேச வேண்டாம்" . இவர்களின் விவாகரத்துக்கு கே.டி.ராம ராவ் தான் காரணம் என மந்திரி சுரேகா கூறியதற்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.