'நேசிப்பாயா' படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்த தகவல்
|இளைஞர்களுக்கான படமாக ‘நேசிப்பாயா’ உருவாகியுள்ளதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
சென்னை,
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் 'அறிந்தும் அறியாமலும், பட்டியல்' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஆரம்பம்' மூலம் மீண்டும் அஜித்துடன் கைகோர்த்தவர், பிறகு பாலிவுட்டுக்கு சென்றார். 'ஷெர்ஷா' என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்தி படத்தை இயக்கி முடித்த நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக நடிகருடன் கைகோர்த்தது ஆச்சரியமாகவும், அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும் அமைந்தது.
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் 'நேசிப்பாயா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், 'நேசிப்பாயா' படம் குறித்தும், அறிமுக நடிகர் ஆகாஷ் முரளியுடன் கைகோர்த்தது குறித்தும் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறுகையில், "தமிழ்ப் படம் இயக்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. எங்கு சென்றாலும், எந்த மாதிரியான படம் இயக்கினாலும் தமிழ்ப் படம் என்றால் மட்டுமே முழு திருப்தியாக இருக்கிறது, அந்த வகையில் நான் இப்போது 'நேசிப்பாயா' படம் மூலம் திருப்தியாக இருக்கிறேன். நேசிப்பாயா எப்படி தொடங்கியது என்றால், 'ஷெர்ஷா' படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை, நட்பு ரீதியாக என்னை அவர் சந்தித்தார், மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் பேசினோம். அந்த சந்திப்பை தொடர்ந்து அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது, அப்போது அவரை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஒருவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்பதை தாண்டி, அவருடன் பழகும் போது அவரை நமக்கு பிடித்துவிடும் அல்லவா அதுபோல் தான் எனக்கு ஆகாஷுடன் பழக பழக அவரை பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் இவருக்காக ஒரு படம் பண்ணலாமே என்று எனக்கே தோன்றியது. அப்படி தான் 'நேசிப்பாயா' உருவானது.
இது முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும் காதலை மையமாக வைத்துக்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரு திரைக்கதையோடு நல்ல டிராமாவாக இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யவில்லை என்றால், அடுத்ததை நோக்கி எளிதில் நகர்ந்துச் சென்றுவிடுவார்கள். அதனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி சினிமா ரசிகர்களுக்கான விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறேன்.
இந்த கதை ஆகாஷ் முரளிக்காக எழுதப்பட்டது அல்ல, இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்தேன். இதற்கு ஆகாஷ் முரளி மிக சரியாக இருந்ததோடு, அவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம், அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு ஆர்வமாக இருந்தது. ஆறடி உயரம், கணீர் குரல் என்று அவரை பார்க்கும் போது ரொம்ப பர்சனாலிட்டியாக இருப்பார், அதுவே ஒரு நடிகருக்கான முதல் தகுதியாகும். ஆனால், அவருடன் பழக பழக தான் தெரிந்தது அவர் குழந்தை போன்றவர் என்று, அது இந்த கதைக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது. ஆனால், எதிர்காலத்தில் அவரை முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான கதை அமைந்தால் நிச்சயம் மீண்டும் ஆகாஷுடன் இணைவேன்." என்றார்.