இயக்குனர் வெற்றிமாறன் தான் என்னுடைய குரு - கென் கருணாஸ்
|நடிகர் கென் கருணாஸ் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை 2' படத்தில் கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 20-ந் தேதி வெளியான படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் சேத்தன், மூணார் ரமேஷ், கென், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் கருப்பன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கென் கருணாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றி மாறன் குறித்து பேசியுள்ளார். அதாவது, "நான் சினிமாவில் முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் தான் அறிமுகமானேன். அவரது படங்களில் தொடர்ந்து நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் என்னை பார்க்கிற விதம் மற்றும் எனக்கு அவர் தரும் கதாபாத்திரம் எல்லாம் எனக்கு சந்தோஷமாக உள்ளது.
மேலும் வெற்றிமாறன் சார் தான் என்னுடைய குரு. நான் அவருடைய ரசிகன். எனக்கென ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார். அவர் சினிமாவை நேசிக்கும் விதத்தினால் தான் அவரால் உலகத்தரமான படங்களை இயக்கமுடிகிறது" என்று பேசியுள்ளார்.