
சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் சர்ச்சைக்குள்ளான தன்னுடைய அநாகரிக பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை,
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'பாட்டல் ராதா'" பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 24ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
'பாட்டல் ராதா' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார். இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். நடிகர் அருள்தாஸ், "மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா?" எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்தார்.
இந்த நிலையில், 'பேட் கேர்ள்' டீசர் நிகழ்வில் பேசிய மிஷ்கின், "என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சினிமாவில் 18 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். கவிஞர் தாமரை, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், லஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு என பலரிடமும் அப்பேச்சிற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
ஒரு நகைச்சுவைக்கு மனிதன் பொய்யாக சிரிக்க முடியாது அவனது ஆழ் மனதில் இருந்துதான் சிரிக்கிறான். நான் நகைச்சுவைக்காக அன்று அப்படி பேசினேன். நான் செய்த நகைச்சுவையில் பத்திரிக்கையாளர் உள்பட அனைவரும் சிரித்தனர். அப்படி பேசும் போது சில அவதூறு வார்த்தைகள் வந்துவிட்டது அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மேடை நாகரீகம் வேண்டும் என சொல்கிறார்கள், நான் ஒரு கூத்து கலைஞர்கள் இருக்கும் மேடையில் நின்று பேசுகிறேன். சங்ககால நாடகங்களில் வசை வார்த்தை வைத்து பாடுவதில்லையா. திருக்குறளில் காமத்துப் பால் அகராதி இல்லையா?. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என பெயரிட்ட ஒரு படத்திற்கு ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டோமா? 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் டிரெய்லரின் இறுதியில் ஒரு கெட்ட வார்த்தை இருந்தது. அதைக் கேட்டோமா?
நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என கடந்த 3 நாள்களாக ஏகப்பட்ட அழைப்புகள். மன்னிப்புக் கேட்க என்றுமே நான் தயங்கமாட்டேன். 'உதிரிப்பூக்கள்' கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கதாபாத்திரம் ஊர்காரர்களைப் பார்த்து உங்களையெல்லாம் நான் கெட்டவனாக மாற்றிவிட்டேன் என்பார். நண்பர்களே, உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றார்.