'வேட்டையன் 2' அப்டேட் கொடுத்த இயக்குனர் ஞானவேல்
|'வேட்டையன்' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.
சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த 'வேட்டையன்' திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
33 வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுன்டர் குறித்தும் பேசுகிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இயக்குனர் ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியதாவது, 'வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் கதாபாத்திரத்தின் முந்தைய கதையை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார். ரஜினி அவர்கள் இதற்கு சரி என்று சொன்னால் மட்டுமே வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது' என அதில் கூறியுள்ளார்.